Home » 10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் – எலான் மஸ்க் ஆலோசனைப்படி ஆட்குறைப்பை தொடங்கிய டிரம்ப்

10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் – எலான் மஸ்க் ஆலோசனைப்படி ஆட்குறைப்பை தொடங்கிய டிரம்ப்

by newsteam
0 comments
10,000 அரசு ஊழியர்கள் அதிரடி பணிநீக்கம் - எலான் மஸ்க் ஆலோசனைப்படி ஆட்குறைப்பை தொடங்கிய டிரம்ப்

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் அரசின் செயல்துறை அதிகரிக்க DODGE துறையை உருவாக்கினார். இதற்கு டிரம்ப்பின் கோடீஸ்வர ஆதரவாளர் எலான் மஸ்க் தலைமை வகிக்கிறார்.
அரசின் தேவையற்ற செலவுகளை டிரம்புக்கு சுட்டிக்காட்டும் வேலையை DODGE செய்து வருகிறது. பின்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் USAID அமைப்புக்கு வழங்கி வந்த நிதியை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் அதிரடியாக முடக்கினார் டிரம்ப்.இந்த நிலையில்தான் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களை எலான் மஸ்க் ஆலோசனையின் பேரில் டிரம்ப் பணிநீக்கம் செய்துள்ளார்.அந்த வகையில் உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், வேளாண்மை, சுகாதாரம் மற்றும் மனிதவளத் துறைகளில் உள்ள ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசிடம் அதிகப்படியான ஊழியர்கள் இருப்பதாகவும், அதிக பணம் வீண் விரயம் மற்றும் மோசடியால் விரயம் ஆவதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இதுவரை, வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு Probation காலத்தில் உள்ள ஊழியர்கள் இந்த பணிநீக்கத்துக்கு இலக்காகி உள்ளனர். சுமார் 10,000 ஊழியர்களுக்கு ஏற்கனவே பணிநீக்கத்துக்கான உத்தரவு துறை ரீதியாக அனுப்பப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் நோய்த் தடுப்பு மையங்களில் உள்ள Probation ஊழியர்களில் பாதி பேர் மற்றும் தேசிய சுகாதார நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுகிறார்கள் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தித் துறையில் சுமார் 1,200 முதல் 2,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்தின் 325 ஊழியர்களும் அடங்குவர்.அமெரிக்க வனத்துறை சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட சுமார் 3,400 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது. அதே நேரத்தில் தேசிய பூங்காக்கள் சேவை நிறுவனம், சுமார் 1,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறது.

வரிகளை வசூலிக்கும் உள்நாட்டு வருவாய் சேவை நிறுவனம், அடுத்த வாரம் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் தயாராகி வருகிறது. பருவகால தீயணைப்பு வீரர்களை பணியமர்த்துவதையும், காடுகளில் இருந்து காய்ந்த மரம் போன்ற தீபற்றும் ஆபத்து கொண்டவற்றை அகற்றும் திட்டங்கள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.மேலும் வேலைகளை தானாக முன்வந்து விட்டுச் செல்வதற்கான சலுகைகளை டிரம்ப் மற்றும் மஸ்க் அறிவித்த நிலையில் அதை ஏற்றுக்கொண்டு வெளியேற 75,000 அரசு ஊழியர்கள் சம்மதித்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதற்கிடையே பணிநீக்கத்துக்கு எதிராக பல்வேறு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!