டுபாயிலிருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபா மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.கடல் வழியாக போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குழுவுக்கு இந்த பணம் வழங்கப்படவிருந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாரவில, தொடுவாவை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் நேற்று (23) இரவு மஹவெவ, சிவிராஜ மாவத்தையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டி ஒன்றை சோதனை செய்தனர்.அப்போது, முச்சக்கர வண்டியில் இருந்த கறுப்பு நிற பயணப் பையை பரிசோதித்தபோது, அதில் பெருந்தொகையான பணம் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள், முச்சக்கர வண்டியில் இருந்த இருவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.சந்தேக நபர்களிடம் விசாரணை செய்தபோது, கடந்த 19ஆம் திகதி பேருவலை அருகே கடலில், சுமார் 300 கிலோகிராம் போதைப்பொருள் தொகை பலநாள் மீன்பிடி படகு மூலம் இலங்கைக்கு கொண்டு வந்தமை தெரியவந்துள்ளது.அந்த படகில் இருந்த கேப்டன் உட்பட 6 பேருக்கு தலா 30 இலட்சம் ரூபா வீதம் பணம் வழங்குவதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கு போதைப்பொருளை கொண்டு வருவதற்கு முன்னர், கடத்தல்காரர்கள் பலநாள் மீன்பிடி படகிற்கு 70 இலட்சம் ரூபா வழங்கியிருந்தனர்.முச்சக்கர வண்டியில் பணத்தை கொண்டு வந்த நபரும் பலநாள் மீன்பிடி படகு ஒன்றின் உரிமையாளராவார். முன்னதாக, 100 கிலோகிராம் போதைப்பொருளுடன் இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அந்த படகு கைப்பற்றப்பட்டிருந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் மேற்பார்வையின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் வழிகாட்டலின் பேரில், பலநாள் மீன்பிடி படகின் கேப்டன் மற்றும் இரு பெண்கள் உட்பட மேலும் 6 சந்தேக நபர்களை, சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டிக்கு பாதுகாப்பு வழங்கிய மோட்டார் சைக்கிளுடன் கைது செய்துள்ளனர்.டுபாயில் இருந்து இயக்கப்படும் இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய இலங்கையை சேர்ந்த நபர்கள், சிலாபம், தொடுவாவை, நீர்க்கொழும்பு, மாத்தறை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதுவரை தெரியவந்துள்ளது.
180 இலட்சம் ரூபா மதிப்பிலான பணத்தை தொடுவாவை பொலிஸார் கண்டுபிடிப்பு – விசாரணையில் வெளிவந்த தகவல்
By newsteam
0
57
RELATED ARTICLES