குருகிராமைச் சேர்ந்த மயங்க் என்பவர் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னர் உடனான உரையாடல் குறித்து லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருந்தார். அதில், ஸ்விக்கி டெலிவரி பார்ட்னரான பங்கஜ் என்பவர் உணவை டெலிவரி செய்யும் போது அவரது இரண்டு வயது மகளை அழைத்துக்கொண்டு வந்து ஆர்டரை வழங்கினார். அவரிடம் ஏன் குழந்தையுடன் வந்து ஆர்டரை வழங்குகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர், மனைவி பிரசவத்தின் போது இறந்துவிட்டதாலும், மூத்த மகன் வகுப்புக்கு சென்று இருப்பதாலும், மகளை தான் மட்டுமே பார்த்துக்கொள்ளவதாக கூறினார். இதனால் மகளை தன்னுடன் அழைத்து வருவதை விட வேறு வழியில்லை என்றும் கூறியதாக பதிவிட்டு இருந்தார்.பங்கஜின் கதை இணையத்தில் புயலைக் கிளப்பியது. பலர் அவரது விடாமுயற்சி மற்றும் உழைப்பை பாராட்டினர். அதே நேரத்தில் அவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆதரவளிக்க முன்வந்தனர். பயனர்கள் அவரது தொடர்பு எண்ணைக் கேட்டு கருத்துகளைப் பதிவு செய்தனர். சிலர் அவருக்கு உதவ ஸ்விக்கியையும் அழைத்தனர். மேலும் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு செயல்பாட்டுக் குழு உறுப்பினர் அவ்வாறு செய்ய ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்தார்.
பங்கஜின் UPI ஐடியைப் பகிர்ந்து கொண்ட மயங்க், பின்னர் அதை நீக்கிவிட்டு, திருத்திய பதிவை பகிர்ந்தார். அதில், “அவருக்கு இப்போது எந்த நிதி உதவியும் தேவையில்லை. அவருக்கு நிறைய அழைப்புகள் வருவதாகவும், வேலை செய்ய முடியவில்லை என்று பங்கஜ் கூறினார். நண்பர்களே, தயவுசெய்து அவரை அழைக்க வேண்டாம். தனது மகளை கவனித்துக் கொள்ளும் அளவுக்கு தான் திறமையானவர் என்பதால், எந்த உதவியும் தேவையில்லை என்று அவர் கூறினார். உதவி உண்மையில் தேவைப்படும் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று பங்ஜ் கூறினார். தனது வீட்டில் மகள் வடிவில் “லட்சுமி” இருப்பதாக பங்கஜ் மகிழ்ச்சியுடன் தெரிவித்ததாக மயங்க் கூறியுள்ளார்.இந்த பதிவை கண்ட பயனர்களோ, இது என் இதயத்தைத் தொட்டது. ஒரு தந்தையாக பங்கஜின் பலமும் அன்பும் ஊக்கமளிப்பதை விட அதிகம். எத்தனை பேர் மௌனப் போராட்டங்களை புன்னகையுடன் சுமக்கிறார்கள் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம் என்றும் இந்த மனிதருக்கும் அவரது மகளுக்கும் இருக்கும் வைராக்கியம், மன உறுதி மற்றும் தைரியத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். கடவுள் அவர்களுக்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் அருளட்டும். ஏதாவது உதவி தேவைப்பட்டால் தெரியப்படுத்துங்கள் என்று பதிவிட்டு பங்கஜை பாராட்டி வருகின்றனர்.பங்கஜின் கதை, நாம் பெரும்பாலும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சேவைகளுக்குப் பின்னால் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத போராட்டங்களின் அப்பட்டமான பிரதிபலிப்பாகும். இது குறிப்பாக ஒற்றைப் பெற்றோரின் போராட்டங்களையும், சமூகத்திலிருந்து முழுமையான பச்சாதாபமின்மையையும், மலிவு மற்றும் நம்பகமான ஆதரவு அமைப்பு இல்லாததையும் காட்டுகிறது.உணவு டெலிவரி பார்ட்னர்கள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில், பங்கஜ் போன்ற டெலிவரி பார்ட்னர்களும் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.