மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சுமார் 460 கி.மீ. தொலைவில் திண்டோரி மாவட்டம் அமைந்துள்ளது. சத்தீஸ்கர் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் பழங்குடியினர் அதிகம் பேர் வசிக்கிறார்கள். இந்த மாவட்டத்தில் உள்ள தேவ்ரா கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா சோனி.இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். இந்த கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் முதல் 2,500 பேர் வரை வசிக்கிறார்கள். இவர்கள் அனைவருக்குமே ஒரே ஒரு குடிநீர் குழாய்தான் உள்ளது. இதனால் இந்த கிராமத்தில் தண்ணீர் பிரச்சனை தலை விரித்தாடுகிறது.இந்த குடிநீர் குழாய் அருகே காலை முதல் இரவு வரை மிகப்பெரிய கூட்டமே காணப்படுகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பது மிகவும் அரிதாக காணப்படுகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக லட்சுமியால் கணவர் வீட்டில் வாழ முடியவில்லை.
இதையடுத்து ஜிதேந்திரா சோனியை அவரது மனைவி லட்சுமி கைகழுவி விட்டு தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவி வீட்டுக்கு சென்று அவரை குடும்பம் நடத்த வருமாறு ஜிதேந்திரா சோனி எவ்வளவோ கெஞ்சி அழைத்து பார்த்தார். ஆனால் தண்ணீர் இல்லாத ஊரில் நான் இருக்க மாட்டேன் என்று கூறி லட்சுமி கணவர் ஊருக்கு செல்ல மறுத்து விட்டார்.இதையடுத்து தண்ணீர் பிரச்சனைக்கு முடிவு கட்ட ஜிதேந்திரா சோனி நினைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு நிகழ்ச்சியில் பங்கேற்று தனது ஊரில் உள்ள தண்ணீர் பிரச்சனை குறித்தும், அதனால் தன்னை மனைவி விட்டுச்சென்றது குறித்தும் கலெக்டரிடம் எடுத்துரைத்தார். இது தொடர்பாக ஜிதேந்திரா சோனி கூறியதாவது:-
என் கிராமத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை காரணமாக என் மனைவி என்னை கைவிட்டுவிட்டார். அவர் எனது குழந்தைகளுடன் அவருடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். எனது மனைவி என்னை விட்டு பிரிந்து செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். ஆனால் தண்ணீர் பிரச்சனையால் இந்த கிராமத்தில் எதிர்காலம் இல்லை என்று என் மனைவி கூறினார்.தண்ணீர் பற்றாக்குறை காரணமாக எங்கள் கிராமத்தை சேர்ந்த பல பெண்கள் கிராமத்தை விட்டு வெளியேற தயாராக உள்ளனர். பல குடும்பங்கள் அமைதியாக கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டன. எனவே எனது பிரச்சனைகளை மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறினேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஜிதேந்திரா சோனியின் புகாரின் பேரில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வெறும் 3 கி.மீ. தொலைவில் உள்ள தேவ்ரா கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், ‘தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த கிராமத்தில் ஒரு ஆழ்துளை கிணறு உள்ளது. ஆனால் அதில் நீர் மட்டம் குறைந்துவிட்டது. எனவே பக்கத்து கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் இணைப்புகளை வழங்குமாறு கிராம மக்கள் கோரியுள்ளனர்.தேவ்ரா கிராமத்தில் உள்ள பழைய குடிநீர் குழாயை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் இணைக்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நீர் வினியோகத்தை தொடங்க உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.குடிநீர் பிரச்சனையால் கணவனை கைகழுவி விட்டு சென்ற பெண்ணின் உதவியால் தேவ்ரா கிராமத்தில் குடிநீர் பிரச்சனைக்கு முடிவு எட்டப்பட உள்ளது.