வட மாகாணத்தின் வன்னி பிராந்தியத்தில் 12-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட டிஜிட்டல் அறிவு (Digital Literacy) பற்றிய ஒரு ஆய்வில் ஏறத்தாழ 50 சதவீதமானவர்கள் மின்னஞ்சலை பயன்படுத்துவதில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, 17 சதவீதமானோர் மட்டுமே இணையதளங்கள்மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேலைவாய்ப்பை பெறுகின்றனர் என்றும் 30 சதவீதமானோர் மட்டுமே இணையதளங்கள் ஊடாக அரசாங்க சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர் என்றும் 30 சதவீதமானோர் சமூக வலைத்தளங்களை அறவே பாவிப்பதில்லை என்றும் இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது.
வன்னி பிராந்தியத்தின் வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 1,347 குடும்பங்களை சேர்ந்த 12-40 வயதுக்கு இடைப்பட்ட 2,975 பேரிடம் இந்த ஆய்வினை பிரித்தானியாவின் கேட் நிறுவனம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகம் ஆகியவை கூட்டாக மேற்கொண்டிருந்தன. யுனெஸ்கோவின் டிஜிட்டல் அறிவு பூகோள சட்டகத்துக்கு (UNESCO’s Digital Literacy Global Framework ) அமைவாக இந்த ஆய்வினை மேற்கொள்ளவதற்கான தொழில்நுட்ப பங்காளிகளாக நேபாளத்தின் ASER, Gali Gali மற்றும் Karkhana Global ஆகிய ஆகிய நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தன.இந்த ஆய்வுக்கான தகவல் திரட்டும் பணி 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளபப்ட்டிருந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர் அதன் முழுமையான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் பெறுபேறுகள் பிரகாரம், கையடக்கதொலைபேசி எல்லோருக்கும் பொதுவாக கிடைக்கும் சாதனமாக இருக்கிறது. 92.3 சதவீதமானோரின் வீடுகளில் குறைந்தது ஒரு கையடக்க தொலைபேசியாவது உள்ளது. மன்னாரில் 98.85 சதவீதமானோர் கையடக்கத்தொலைபேசியை வைத்திருக்கின்றனர். இது ஏனைய ஏனைய இரண்டு மாவட்டங்களையும் விட அதிகமாகும்.அதிகளவான கையடக்கத்தொலைபேசி பாவனை காரணமாக மூன்று மாவட்டங்களிலும் அனேகமானவர்களுக்கு இணையத்தை (internet) பெற்றுக்கொள்ள முடிகின்றது. மன்னாரில் 90.48 சதவீதமானோரும், வவுனியாவில் 85.86 சதவீதமானோரும், முல்லைத்தீவில் 85.41 சதவீதமானோரும் இணையத்தை பயன்படுத்துகின்றனர். ஆனால், இணையத்துக்காக பிரோட்பாண்ட் கருவியை ஐ பயன்படுத்துவோர் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர். அதேபோல, 12 சதவீத வீடுகளில் மட்டுமே கணினியும் 5.4 சதவீத வீடுகளில் மட்டுமே மடிக்கணிணியும் உள்ளது.
டிஜிட்டல் திறன் அறிவை அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட நிலைகள் என்று வகைப்படுத்தும்போது அவை வயது, பொருளாதாரம் , பால் வேறுபாடுகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. சில அடிப்படை செயற்பாடுகளான சாதனங்களை மின்னேற்றம் செய்தல், தொலைபேசி அழைப்புகளைச் செய்தல் மற்றும் தொடர்புகளைச் சேமித்தல் போன்றவை 95 சதவீததத்துக்கும் அதிகமானோருக்கு தெரிந்திருக்கின்றது.
அதேவேளை இணையங்களை பயன்படுத்துதல் போன்ற இடைநிலை திறன் 79 சதவீதமானோருக்கு இருக்கின்றது. இருந்தபோதிலும், மின்னஞ்சலை உருவாக்குதல், மின்னஞ்சல் அனுப்புதல், இணையதளங்கள்மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளுதல், இணையதளங்கள் ஊடாக அரசாங்க சேவைகளை பெற்றுக்கொள்ளுதல் போன்ற மேம்பட்ட அறிவு 50 சதவீதமானோருக்கு மட்டுமே இருக்கிறது.
அதேவேளை, டிஜிட்டல் சாதனங்களை வைத்திருத்தல் மற்றும் அவற்றை கையாளும் திறன் ஆகியவை பாலின அடிப்படையில் வேறுபடுகின்றது. பெண்களை விட ஆண்கள் கணினிகள் மற்றும் மடிக்கணினிகளை கொண்டிருக்கின்றனர். அத்துடன் தகவல்களை இணையதில் தேடுதல் மற்றும் மின்னஞ்சல் போன்றவற்றில் ஆண்கள் கூடுதல் திறனை கொண்டுள்ளனர்.அத்துடன், டிஜிட்டல் திறன் வயது அடிப்படையில் வேறுபட்டு காணப்படுவதையும் இந்த ஆய்வு வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக 12–24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஏனைய வயதுப்பிரிவினரை விடவும் சமூக ஊடக பயன்பாடு, இணையத்தில் சொற்களை இட்டு தகவல்களை தேடுதல் போன்ற மேம்பட்ட டிஜிட்டல் திறன்களில் அதிக தேர்ச்சியைக் காட்டுகிறார்கள். இதற்கு நேர்மாறாக, சற்று வயது கூடிய 24–40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் தொலைபேசி அழைப்புகளைச் செய்தல் மற்றும் சாதனங்களை இயக்குதல் போன்ற அடிப்படை அறிவில் அதிக தேர்ச்சியைக் கொண்டிருக்கின்றார்கள்.
24-40 வயதுக்கு இடைப்பட்ட பிரிவினர் அதிக வயதுடையவர்கள் என்ற பிரிவுக்குள் உட்படுத்தப்படமுடியாது என்பதால், கணிசமானளவு மிகையான டிஜிட்டல் அறிவை அவர்கள் கொண்டிருப்பார்கள் என்று இந்த ஆய்வில் கருதப்பட்டபோதிலும், அவர்கள் மத்தியில் மிகையான டிஜிட்டல் அறிவு ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதற்கு 15 வருடங்களுக்கு முன்னர் நிலவிய யுத்தம் மற்றும் யுத்தத்துக்கு பின்னரான கடும் நிலைமை அவர்களின் மாணவ பருவ கற்றல் செயற்பாடுகளை பாதித்திருந்தமை ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அறிவுக்கும் வீட்டின் பொருளாதார நிலைக்கும் இடையில் வலுவான தொடர்பும் இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது. பொருளாதார நிலை உயர்ந்த குடும்பங்கள் மத்தியில் இணையங்களில் தகவல்களை தேடுதல் மற்றும் மின்னஞ்சல் பயன்பாடு போன்ற மேம்பட்ட திறன்களில் அதிகளவு தேர்ச்சி காணப்படுகின்றது. இருப்பினும், சாதனங்களை மின்னேற்றம் செய்தல், தொலைபேசி அழைப்புகளைச் செய்தல் மற்றும் தொடர்புகளைச் சேமித்தல் போன்ற அடிப்படை திறன்கள் பொருளாதார வசதி வேறுபாடு காரணமாக அதிகம் வேறுபடவில்லை. இது அடிப்படை டிஜிட்டல் அறிவில் பொருளாதார நிலை அதிகளவு தாக்கம் செலுத்தவில்லை என்பதை காட்டுகின்றது.மேம்பட்ட டிஜிட்டல் அறிவு தொடர்பில் உள்ள வேறுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், பாலின ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும், பொருளாதார நிலையில் குறைவாக உள்ள சமூகங்களில் டிஜிட்டல் உள்கட்டமைப்பினை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டிய அவசியத்தை இந்த ஆய்வின் பெறுபேறுகள் வலியுறுத்துகின்றன.