சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலை விடுதியில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் பதவியில் இருந்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை இடமாற்றும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,வைத்தியசாலை முன்பாக நேற்று இரவு ஆரம்பித்த கண்டன ஆர்ப்பாட்டம் அதிகளவிலான மக்களின் பங்கேற்புடன் தொடர்ச்சியாக இன்றும் நடைபெற்ற நிலையில் வைத்திய அத்தியட்சகர் வெளியேறினார். இதனையடுத்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக நடைபெற்ற போராட்டமும் நிறைவுக்கு வந்தது.போராட்டகாரர்களுடன் கலந்துரையாடிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா,பாராளுமன்றத்திலிருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், தானே தற்போதும் வைத்திய அத்தியட்சகர் எனவும்,தற்போது சுகவீன விடுமுறையில் இருப்பதாகவும், குறித்த நிலைமை தொடர்பில் பேசுவதற்காக கொழும்புக்கு செல்லவுள்ளேன் எனவும் தெரிவித்தார். என்னுடைய விடுமுறை முடிந்ததும் எனக்கு மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கே நியமனம் தர வேண்டும். இல்லை என்றால் நான் இந்த வைத்திய தொழிலை செய்ய மாட்டேன். நான் வேறு நாட்டுக்கு சென்றுவிடுவதாகவும் மக்கள் முன்னிலையில் கூறிவிட்டு வெளியேறியுள்ளார்.