மாணவர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி நடவடிக்கை

தமது பாடசாலைக்கு ஸ்மார்ட் வகுப்பறையொன்றைப் பெற்றுத் தருமாறும் விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் கண்டி, மெனிக்திவெல மத்திய கல்லூரி மாணவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்த கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் எண்ணக்கருவின் பிரகாரம் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, துறைமுக நகரம், மத்திய வங்கி, பாராளுமன்றம் உள்ளிட்ட கொழும்பை சுற்றியுள்ள கல்வியுடன் முக்கிய தொடர்புள்ள விசேட இடங்களை பார்வையிடும் வாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மெனிக்திவெல மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் சுமார் 570 மாணவர்கள் நேற்று (05) களப்பயணத்தில் இணைந்திருந்ததோடு அவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையை பார்வையிடவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்ததோடு தங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்திக்க வாய்ப்பளிக்குமாறு கோரினர்.கடுமையான வேலைப் பழு இருந்த போதும் மாணவர்களைப் புறக்கணிக்காமல் அவர்களைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.ஸ்மார்ட் வகுப்பறையொன்றை தமது பாடசாலைக்கு வழங்குமாறும், விளையாட்டு மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் மாணவர்கள் விடுத்த கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்லூரியின் மைதானத்தை நவீனமயப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

கல்லூரியில் விளையாட்டுத் துறையில் திறமை செலுத்தும் சிறார்களையும் ஜனாதிபதி இதன்போது பாராட்டினார். பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.இதேவேளை, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவையும் மாணவர்கள் சந்தித்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கல்விசாரா செயற்பாடுகளை மேம்படுத்துவற்கு எடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மெனிக்திவெல மத்திய கல்லூரி அதிபர் டபிள்யூ.எம்.ஆர்.எஸ். வீரசேகர ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here