நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று நாடாளுமன்ற அமர்வின் போது ஆற்றிய உரையினால் சபை கடுமையான குழப்ப நிலையை அடைந்துள்ளது.அவர் சில,நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொலிஸார் மற்றும் சபாநாயகர் உள்ளிட்டவர்களை கடுமையாக அவமதிக்கும் வகையில் விமர்சித்ததால், நாடாளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அர்ச்சுனாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், “உங்கள் அனைவருக்கும் என்னைப் பார்த்தால் பயம்” என்று அர்ச்சுனா எம்.பி சபையில் கடுமையாக கூச்சலிட்டார்.
இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர பேசும் போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு உரையாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், சபையைப் பார்த்தும், சபாநாயகரைப் பார்த்தும் இவ்வாறு உரையாற்றுவதை இந்த சபை எப்படி அனுமதிக்கின்றது என்றும், இங்கு பாகுபாடு இல்லை என்றும் கடும் தொனியில் பேசினார்.அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு தலையில் பிரச்சினை என்றும் மனநல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அவரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவேண்டியது அவசியம் என்றும் இதன்போது சபையில் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார்.மேலும், அர்ச்சுனா எம்.பி பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.