உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தை அடுத்த சிராபூரில் உதய் நாராயணன் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நேற்று மதியம் அரங்கேறிய இந்த சம்பவத்தில் குறிப்பிட்ட பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவாக அரிசி சாதம் மற்றும் கறி வழங்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் சாப்பிட துவங்கிய நிலையில், ஒரு மாணவர் பள்ளியில் வழங்கப்பட்ட உணவில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை கண்டறிந்தார். உடனே அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் அனைவரும் சிராபூரில் உள்ள சோரோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு குமட்டல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இறந்து கிடந்த சம்பவம் குறித்து கல்வி அலுவலர் கூறும் போது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக உத்தர பிரதேச மாநிலத்தின் கராக்பூரில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவு சாப்பிட்டு 15 வயது மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கிட்டத்தட்ட 80 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.