ஆஸ்திரியாவின் வியன்னாவில் பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் நிகழ்ச்சியின்போது, பலரை கொல்வதற்கு சதிகாரர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விப்ட், ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதன்படி, ஆஸ்திரியாவின் வியன்னாவில் நேற்று (ஆக.,8) துவங்கி, மூன்று நாட்களுக்கு இசை நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த, ஐ.எஸ்பயங்கரவாதிகள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இது தொடர்பாக, ஆஸ்திரியாவைச் சேர்ந்த 19 மற்றும் 17 வயது இளைஞர்கள் இருவரை, போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை தொடர்பாக போலீசார் கூறியுள்ளதாவது: இந்த இருவரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு, அதன் ஆதரவாளர்களாக இருந்துள்ளனர். டெய்லர் ஸ்விப்ட் நிகழ்ச்சியில் பல ஆயிரம் பேர் பங்கேற்பர் என்பதால், அதில் தாக்குதல் நடத்தி, எவ்வளவு பேரை கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்வதற்கு திட்டமிட்டிருந்தனர்.
அவர்களுடைய வீடுகளில் இருந்து, ஐ.எஸ். அமைப்பு தொடர்பான ஆவணங்கள், வெடி பொருட்கள், கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், இவர்களுக்கு ஐ.எஸ்.அமைப்புடன் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.