இந்தியாவின் கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30).இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.