மருத்துவ ஆலோசனையை மீறியதால் கோர விபத்து

அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று இங்கினியாகல பொலிஸ் பிரிவிக்கு உட்பட்ட தெவாலஹிந்த பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது.சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.பின்னர், பயணிகள் உடனடியாக சாரதியை இங்கினியாகல வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சாரதி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (23) இரவு 7.00 மணியளவில் அம்பாறை டிப்போவில் இருந்து கொழும்பு நோக்கி பேருந்து புறப்பட்டுள்ளது.சாரதிக்கு ஏற்பட்ட சில சுகவீனம் காரணமாக இங்கினியாகல பல்கலைக்கழகத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு அந்த இடத்திலுள்ள தனியார் சிகிச்சை நிலையத்திற்கு சென்று சிகிச்சை பெற்று கொழும்பு நோக்கி புறப்பட்டுள்ளார்.சுகவீனம் அதிகமாக இருப்பதால் இந்தப் பயணத்தை செல்ல வேண்டாம் என வைத்தியர் அறிவுறுத்திய போதும் வேறு சாரதி இல்லை எனக் கூறி பேருந்தை கொழும்பு நோக்கி செலுத்தியுள்ளார்.

இருப்பினும், மருத்துவரை சந்தித்து 10 மைல் செல்வதற்கு முன்னரே, சாரதி மீண்டும் நோய்வாய்ப்பட்டதால், பேருந்து வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளானது.விபத்தின் போது பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்த போதிலும், ஒரு பயணிக்கு மட்டுமே சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளன.உயிரிழந்த சாரதி பரகஹகெலே பிரதேசத்தை சேர்ந்த 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here