காதலர் தினத்தன்று, ‘வாடகைக்கு காதலன் வேண்டுமா’ என ஒட்டப்பட்ட போஸ்டர், இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.உலகம் முழுதும் நேற்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த காதலர் தினத்தில் பல விசித்திரமான சம்பவங்கள் நடக்கும். நேற்று ஜெயநகர், பனசங்கரி ஆகிய பகுதிகளில் ஒரு விசித்திரமான போஸ்டர் ஒட்டப்பட்டது.இந்த போஸ்டரை பார்த்த பலரும் பல விதமான ரியாக் ஷன்களை கொடுத்தனர். அப்போஸ்டரில், ‘வாடகைக்கு காதலன் கிடைக்கிறான்’ என எழுதப்பட்டு இருந்தது. ‘ஒரு நாள் வாடகைக்கு 389 ரூபாய் கட்டணமாக செலுத்தி காதலனை பெற்று கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.இதற்கு, போஸ்டரில் உள்ள க்யூ.ஆர்., குறியீடை ஸ்கேன் செய்தால் போதும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த போஸ்டரை பார்த்த சிலர், இதை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இதற்கு, அந்நபரின் மீது வழக்கு தொடரும் படி பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் காதலன், காதலியை வாடகைக்கு எடுக்கும் முறைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.