கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி என்ற பெண்ணை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்றத்துக்கு துப்பாக்கியைக் கொண்டு வந்தவரென காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.கொலைக்குப் பின்னர் தப்பிச் சென்றிருந்த குறித்த பெண் வேறு நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்பட்டது.எனினும், அந்தப் பெண் நாட்டினுள்ளேயே தலைமறைவாகியுள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மத்துகம பகுதிகளில் பல இடங்களில் நேற்று விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இருப்பினும், சட்டத்தரணி வேடமணிந்து நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிதாரியான கமாண்டோ சமிந்துவுடன் இருந்த இந்தப் பெண் குறித்து எந்த தகவலும் கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி குறித்த பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர் கொழும்பு ஜெயா மாவத்தையில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.திட்டமிடப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ கடந்த 19 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.இதற்கிடையில், கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மேலும் மூன்று சந்தேக நபர்களை 48 மணிநேர தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்குக் கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவல நேற்று அனுமதியளித்தார்.