ஶ்ரீலங்கன் விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் இலங்கை விமானங்கள் சிலவற்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.3 விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், பல விமானங்களின் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனையவை தாமதமானதாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.ஒவ்வொரு விமானமும் அதன் விமான பயணத்தை முடித்த பிறகு தொழில்நுட்ப மதிப்பீட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும். குறிப்பிட்ட சில விமானங்களில் மேற்கொள்ளப்படும் தேவையான தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாகவும், அதற்கமைவாக இந்த 3 விமானங்களும் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதன் காரணமாக நேற்று (17) மாலை 06.35 மணிக்கு இந்தியாவின் சென்னைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-123 மற்றும் இரவு 10.15 மணிக்கு சென்னையில் இருந்து கட்டுநாயக்கவிற்கு வரவிருந்த UL-124 விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவின் புதுடில்லியில் இருந்து இரவு 10.10 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-196 விமானமும், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னிலிருந்து இரவு 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் இரத்து செய்யப்பட்டுள்ளது.மேற்படி, விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு அறிவிக்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், இந்த விமானங்களின் ஊடாக குறித்த இடங்களுக்கு கொண்டு செல்ல விரும்பும் பயணிகளை மாற்று விமானங்கள் மூலம் அனுப்பவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here