மாலம்பே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் பொலிஸ் உத்தரவை மீறி தப்பிச் செல்ல முயன்ற கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (23) இரவு இடம்பெற்றுள்ளது.மாலம்பே பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஹோகந்தர, விஸ்கம் மாவத்தை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை சோதனையிட முயன்றுள்ளனர்.இதன்போது, காரின் சாரதி பொலிஸ் உத்தரவை மீறி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். பின்னர் பொலிஸ் அதிகாரிகள் கார் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ள நிலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இணைந்து காரை சோதனையிட்ட போது, காரினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ 800 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.பின்னர், காரில் இருந்த சாரதியும், அவரது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெல்கொடை பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய கார் சாரதியும் 33 வயதுடைய மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, சந்தேக நபர்களின் வீட்டை சோதனையிட்ட பொலிஸார், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாலம்பே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்