Wednesday, February 26, 2025
Homeஇலங்கைநாட்டுக்குள் வரும் தரமான இஸ்லாமிய நூல்கள் மீதும் தீவிர சுங்கப் பரிசோதனை - ஹக்கீம் ...

நாட்டுக்குள் வரும் தரமான இஸ்லாமிய நூல்கள் மீதும் தீவிர சுங்கப் பரிசோதனை – ஹக்கீம் தெரிவிப்பு

நாட்டுக்குள் கொண்டுவரப்படும் தரமான இஸ்லாமிய நூல்கள் மீதும் தீவிரமான சுங்கப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.இலங்கை வானொலி ,முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் கலா பூஷணம் எம்.இஸட்.அஹ்மத் முனவ்வர் எழுதிய “ஆயிரமாவது குத்பா அஞ்சலும் -வரலாறும்” நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு-7, புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற போது, அதில் அதிதிச் சொற்பொழிவு ஆற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார் .

அங்கு உரையாற்றும் போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு காலத்தில், முன்னர் இப்னு நபாதா என்பவர் அரபுத் தமிழில் எழுதிய குத்பா பிரசங்கங்களே நாட்டில் அநேக பள்ளிவாசல்களில் நிகழ்த்தப்பட்டு வந்தன .பின்னர் உள்நாட்டு அரபு கலாசாலைகளிலும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கற்றுத் தேறிய தரமான உலமாக்களால் சிறப்பான முறையில் ஜும்ஆ குத்பாக்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.இன்று இந்த 1000 ஆவது குத்பா வானொலி அஞ்சல் பற்றிய நூலை ஓர் அடையாளமாக வெளியிட்டு வைக்கின்ற பணியை செய்வதன் மூலம், அதை ஓர் ஆவணமாக விட்டுச் செல்வதற்கும், தொடர்ந்தும் இந்தப் பணி நிகழ வேண்டும் என்பதற்குமான ஒரு முயற்சியைத்தான் அஹ்மத் முனவ்வர் செய்திருக்கின்றார்.சமூகம் என்ற வகையில் நாங்கள் எதிர்நோக்குகின்ற சிக்கல்களில் ஒன்றுதான் எங்களுக்கு இடையில் இருக்கின்ற ஆன்மீக ரீதியான சில வேறுபாடுகளை மிகைப்படுத்துகின்ற நிலைவரம் சில இடங்களில் காணப்படுவதாகும். அதை எப்படி குறைத்துக் கொள்ளலாம் என்பதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா போன்ற அமைப்புக்கள் மிக சிறப்பாகச் செயல்பட்டு ,எங்களுக்கிடையில் இருக்கின்ற ஆன்மீக ரீதியான சில கருத்து வேறுபாடுகளின் மத்தியில் ஒற்றுமையைக் காண்பது எப்படி என்பது பற்றிய முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. மாறி வருகின்ற உலகில் ,நிறைய புதுமைகள் நிகழ்கின்ற ஒரு யுகத்தில் குத்பா பிரசங்கங்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி ,நமது மக்களை நல்வழிப்படுத்துகின்ற முயற்சிகள் பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த முயற்சிகளுக்கு மத்தியில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால், நாம் எல்லோரும் எதிர்நோக்கிய துர்பாக்கிய சம்பவமான உயர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.அது நடந்த பிறகு , குறிப்பாகச் சொல்லப் போனால், சென்ற நூற்றாண்டினதும்,இந்த நூற்றாண்டினதும் மிகப்பெரிய இஸ்லாமிய ஆளுமைகளான, இரண்டு வருடங்களுக்கு முன்பு கத்தார் நாட்டில் தன்னுடைய 96ஆவது வயதில் உயிர் நீத்த கலாநிதி யூசுப் கர்ழாவி மற்றும் தலைசிறந்த சன்மார்க்க அறிஞர்களான ஷஹீத் செய்யத் குதூப், மௌலானா செய்யத் அபுல் அஃலா மௌதூதி போன்றோரின் பெயர்கள் எல்லாம் இந்த நாட்டில் துரதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்படும் பெயர்களாக இருக்கின்ற ஒரு நிலைமை உருவாகியிருக்கின்றது.அல்லாமா யூசுப் கர்ழாவியை பொறுத்த மட்டில் அவருடைய முயற்சிகளில் குறிப்பாக இஸ்லாமிய சிந்தனையை நவீன உலகுக்கு உகந்த வகையில் வடிவமைத்த அவருடைய பணி அளப்பரியது. அதிலும் குறிப்பாக, பிக்ஹுல் ஜிஹாத் – ஜிஹாத் பற்றிய சிந்தனை என்ன, ஜிஹாத்தின் பல முகங்கள், அது தவறாக பயன்படுத்தப்படுகின்ற விவகாரம் பற்றியும், பிக்ஹுல் அக்கல்யாத் என்ற புதிய துறையை பற்றி,அதாவது முஸ்லிம்கள் சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற நாடுகளில் எப்படி தங்களுடைய வாழ்வின் நெறிமுறைகளை அடுத்த சமூகங்களோடு சகவாழ்வுக்காக வடிவமைத்து கொள்வதில் புதிய சிந்தனைகளைப் புகுத்துவது பற்றியும் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கின்றார்.

இதையும் படியுங்கள்:  புலமைப்பரிசில் பரீட்சை - விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

இவர்களைப் பற்றித் தவறான விதத்தில் பொருள் கோடல் செய்வதற்கு அப்பால், இன்று இந்த நாட்டுக்குள் வருகின்ற தரமான இஸ்லாமிய நூல்களையும் சுங்கத் திணைகளத்தில் தீவிர பரிசோதனைக்குட்படுத்துகின்ற பெரிய அவஸ்த்தைக்குள் நாங்கள் வாழ்கின்றோம். அலிசப்ரி அமைச்சராக இருந்த காலம் தொட்டு இது சம்பந்தமான முயற்சிகளை நாங்கள் செய்து கொண்டிருக்கின்றோம். இன்றைய ஆட்சியாளர்கள் மத்தியிலும் இந்த பாதுகாப்பு அமைச்சருக்கும் இதனைக் கொண்டு சென்றிருக்கின்றோம். இது சமூகங்களுக்கு மத்தியில் தேவையில்லாத விபரீதத்தையும் ,தவறான எண்ணத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கின்றோம்.

இந்த நாட்டில் மூன்று சமூகங்களுக்கு மத்தியிலும் அரசியலுக்காக வன்முறையை பாவித்தவர்கள் இருந்திருக்கின்றார்கள். இன்று ஆட்சியில் இருக்கின்ற கட்சியினரும் ஆரம்ப காலத்தில் வன்முறையோடு ஆட்சியை கைப்பற்றலாம் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.அவர்களுடைய தலைவர் ரோஹன விஜயவீரவின் நினைவாக அந்த கட்சியினர் “மஹவிரு தின’ என்பதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். இந்த நாட்டில் சர்ச்சைகள் இருந்தபோதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்டிக்கின்ற ஒரு வழமை இருப்பது எல்லோருக்கும் தெரியும்.ஆனால் “இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை இந்த ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகின்ற விடயத்தைக் கூட செய்யவில்லை. இந்த நாட்டில் எந்த நோக்கத்துக்காக இவ்வாறு செய்யப்பட்டது என்பது பற்றிய விசாரணைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன

தற்போதைய ஆட்சியாளர்கள் மீது இந்த நாட்டு முஸ்லிம் மக்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை வைத்ததோடு, முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்படுகின்ற இந்த மிகப்பெரிய பழிக்கு சமூகம் காரணமல்ல ,இதற்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருந்தது என்பது இன்று ஒரு பேசுபொருளாக மாறியிருக்கின்றது. இவற்றிற்கு விடைகாண வேண்டியிருக்கின்றது.

கலாநிதி யூசுப் கர்ழாவி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் கூறியதைப் போல ,வஸத்திய்யா -உம்மத்தன் வஸத்தன் என்ற நடுநிலையான சமுதாயம் என்பதற்கான உண்மையான கருதுகோள் என்ன என்பதை அடிப்படையாக வைத்து, அதனை தனியான துறையாக உருவாக்கி, எப்படி முஸ்லிம் சமூகம் நடுநிலையான ஒரு சமுதாயமாக இந்த உலகில் இருக்கின்றது என்பதை மெய்ப்பித்து ,உயிர்ப்பித்த உலமாக்களின் கருத்துக்களை உள்வாங்கி, இன்னும் ஆழமாக மாற்று சமூகத்தினர் மத்தியில் இந்த சமூகம் பற்றிய சரியான தெளிவை கொண்டு செல்கின்ற ஒரு முயற்சியில் இலங்கை வானொலி ஊடாக அஞ்சல் செய்யப்படுகின்ற குத்பாபேருரைகள் உட்பட நல்வழி காட்டுகின்ற நவீன யுகத்தில் நாங்கள் வாழ்கின்றோம் . எல்லாம்வல்ல இறைவன் பேரருள் புரிவானாக என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!