அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில், 295 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில், இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக ஓட்டங்கள் அடிப்படையில் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். 534 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, வெறும் 238 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியுற்றது.இந்திய அணி சார்பில், கேப்டன் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான உள்ளூர் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது, கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது ஆகியவை இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக கருதப்பட்டது. ஆனால், அதை அனைத்தையும் கடந்து, முதல் போட்டியில் வெற்றி வாகை சூடியுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 6ஆம் திகதி அடிலெட் மைதானத்தில் பகல், இரவு ஆட்டமாக தொடங்க உள்ளது.
1ஆவது இன்னிங்ஸ் சுருக்கம்:
போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. ஆனால், எதிர்பார்த்தபடி ஓட்டங்களை சேர்க்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவிற்கு தாக்குப்பிடித்த நிதிஷ்குமார் ரெட்டி 41 ஓட்டங்களும், பண்ட் 37 ஓட்டங்களும் சேர்த்தனர். இதனால், இந்திய அணி 150 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டானது. இதையடுத்து அவுஸ்திரேலிய அணி களமிறங்கியபோது, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் அதிரடி காட்டினனர். குறிப்பாக கேப்டன் பும்ரா அட்டகாசமாக பந்துவீசினார். இதனால், ஓட்டம் எடுக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம், 104 ஓட்டங்களுக்கு அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும், ராணா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
2ஆவது இன்னிங்ஸ் சுருக்கம்:
46 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி அபாரமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஷ்வால் மற்றும் கே.எல். ராகுல், அவுஸ்திரேலியா பந்துவீச்சை நையப்புடைத்தனர். இருவரும் அதிரடியாக ஆடி ஓட்டங்களை சேர்த்தனர். இந்த கூட்டணியை பிரிக்க முடியாமல் எதிரணி திணற, ஜெய்ஷ்வால் மற்றும் கே.எல். ராகுல் ஜோடி 200 ஓட்டங்களை சேர்த்தது. சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராகுல் 77 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஷ்வால் 161 ஓட்டங்கள் விளாசி பல சாதனைகளை முறியடித்தார். அவரை தொடர்ந்து வந்த கோலி அதிரடியாக ஆடி சதம் விளாசினார். இதன் மூலம், 487 ஓட்டங்கள் குவித்து இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதையடுத்து 534 ஓட்டங்கள் என்ற பிரமாண்ட இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா, 238 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக அந்த அணியில் டிராவிஸ் ஹெட், 89 ஓட்டங்கள் சேர்த்தார்.