உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்தவொரு தடையும் இல்லையென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவரினால் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். கேள்விக்கு மேலும் பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை மற்றும் கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.அதற்கமையவே, நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை, கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவாகக் கூறிக்கொள்கின்றோம். அதேநேரம், உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் இல்லை.உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதும் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதும் ஒன்றல்ல. ஆகவே இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.உயிரிழந்த உறவினர்களை நினைவுகூருவதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ள அதேநேரம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு எந்த வகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.