பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பஹல மஸஸென்ன பகுதியில், தந்தை ஒருவர் தனது மகனை தடியால் தாக்கிவிட்டு, அவரும் விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4ஆம் திகதி மகனை தடியால் தாக்கியதோடு, தந்தையும் விஷம் குடித்துள்ளனர். இந்நிலையில், குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மகனின் நிலைமை மோசமாக இருப்பதால், மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.23 வயதுடைய பல்கலைக்கழக மாணவனான மகன், வீட்டின் சாலையில் கணினியில் பாடம் செய்துக்கொண்டிருந்த போதே இவ்வாறு தந்தையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். விசாரணைகளில் தந்தைக்கும் தாயாருக்கும் அடிக்கடி சண்டை வருவதாகவும், குறித்த தினம் தந்தை தாயாரை கத்தியால் தாக்க முயன்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
தந்தை தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் பலாங்கொடை நீதவான் பாக்யா தில்ருக்ஷி நேற்று (05) வைத்தியசாலைக்குச் சென்று அவரை 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.அதன்படி, தந்தை தற்போது பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.இரத்தினபுரி குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தற்போது விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர், அதே நேரத்தில் பலாங்கொடை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.