Thursday, March 13, 2025
Homeஇலங்கைகல்குடா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வினைக்கோரிய ரவூப் ஹக்கீம்

கல்குடா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வினைக்கோரிய ரவூப் ஹக்கீம்

பாராளுமன்றத்தில் ( 04) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்குடா முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் பல்வேறு விடயங்களை பட்டியலிட்டு தனது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் ஒரு பிரதேசத்தை நிர்வாகம் செய்ய முடியாது. நிலத்தொடர்பற்ற வகையில் நிர்வாகம் கல்முனையில் அமைய வேண்டுமென்று தமிழ்த்தரப்பில் விரும்பப்படுகின்ற போது, அதேபோன்று, நிலத்தொடர்பற்ற வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கோறளைப்பற்று மத்திக்கு சொந்தமாக ஏற்கனவே எல்லை நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்பட்ட ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற கிராமங்கள் மாத்திரம் இன்று கோறளைப்பற்று மத்தியோடு நிலத்தொடர்பற்ற வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

இது வேண்டுமென்று ஒரு அமைச்சரவைப்பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயத்திற்கு மாற்றமானதாகும். ஏற்கனவே ஒரு ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கத்தக்கதாக அது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்க்கப்பட்டு வருகின்றது.11 கிராம சேவர் பிரிவுகள் உள்ளடக்கிய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் சம்பந்தமாக பாரிய பிரச்சனை இருக்கிறது.
இந்தப்பிரச்சனைக்கான தீர்வை கட்டாயமாக இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்.இது ஒரு மிகப்பாரிய அநீதியாகும். 2000ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத்தீர்மானம் பனம்பல ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

குறிப்பாக, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு 18 கிராம சேவகர் பிரிவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகளும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கும் நிலையில், வேண்டுமென்றே கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் சுமார் 686 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தங்களுடைய ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றது.

கோறளைப்பற்று மத்திக்கு ஆணைக்குழுவின் பரிந்துரையின் மேல் உரித்தாக வேண்டிய 240 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை முழுமையாக ஆளுகை செய்ய முடியாத ஒரு நிலை பிரதேச செயலகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது.
இது தற்போது 7.78 சதுர கிலோ மீட்டருக்கு நிலப்பரப்புக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற மிக மோசமான செயற்பாடாகும்.மட்டக்களப்பு மாவட்ட அரச நிர்வாகம் இவ்விவகாரத்தில் அநீதியாக நடந்து கொள்வது மிகப்பாரதூரமான விடயமாகும். இப்படியான எல்லைப்பிரச்சனைகளுக்கான தீர்வாக ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளவாறு வர்த்தமானியில் பிரசுரித்து, நிர்வாக ரீதியாக இருக்கின்ற பிரச்சினை தீர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறான சிக்கல் நிலையினால் சில கிராம சேவகர் பிரிவுகளுக்கு 02 கிராம சேவகர்கள் நிர்வாகம் செய்கின்ற குழப்பமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.எல்லை நிர்ணய ஆணை குழுவின் சிபாரிசுகள் பின்பற்றப்படாத காரணத்தினால் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கு 02 கிராம உத்தியோகத்தர் கடமை புரியும் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.இது தொடர்பாக பொறுப்பான அமைச்சர் கவனஞ்செலுத்தி, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு உரிய 240 சதுர கிலோ மீட்டர் நிலைப்பரப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

இது வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் அம்மக்களுக்கு செய்யும் சட்ட விரோதசெயலாகும்.இது தொடர்பில் இதற்கு முன்னரும் பாராளுமன்றத்தில் பல தடவை பேசியுள்ளோம். ஆனால், அவற்றுக்கு உரிய தீர்வு வழங்கப்படவில்லை என்பதை கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.மேலும், ஓட்டமாவடி பலநோக்குக் கூட்டுறவு சங்க வளாகத்தில் கடந்த ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட கலாசார மண்டபக்கட்டிடம் இன்னும் முழுமை பெறாது கம்பிக்கூடாக காட்சியளிக்கிறது.கடந்த ஜனாதிபதித்தேர்தல் பிரசாரத்திற்குச் சென்ற ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக குறித்த கம்பிக்கூடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார்.விமர்சித்த அவருக்கும் பொறுப்புள்ளது. இம்மண்டபத்தின் நிர்மாணப்பணியை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள ஓட்டமாவடி முகைதீன் அப்துல் காதர் விளையாட்டு மைதானம் அடிக்கடி வெள்ளத்தில் மூழ்கின்றது. இதனால் இதனைப்பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்றது.

இதையும் படியுங்கள்:  சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் வழங்க முற்பட்ட பெண் கைது

அங்குள்ள பார்வையாளர்கூடம் சேதமடைந்து, பயன்படுத்தவே முடியாத நிலையில் அதில் பல்வேறு முறைகேடான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. ஆகவே, இவ்வமைச்சின் கீழான பிரதேச சபைக்குச் சொந்தமான மைதான என்பதால் நிதியொதுக்கீடுகளை மேற்கொண்டு இதனை அபிவிருத்தி செய்யுமாறு வேண்டுகிறேன்.அத்துடன், கடந்த அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகக்கட்டிடத்தை பூரணப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.இப்பிரதேசத்தில் நீண்ட காலமாக பிறப்பு, இறப்பு பதிவுகள் வாழைச்சேலை வைத்தியசாலையூடாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் பதியப்பட்டு வந்த நிலையில், அவை தற்போது கோறளைப்பற்று செயலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இது முழுக்க முழுக்க இனவாதத்துடன் செய்யப்பட்ட செயலாக மக்கள் பார்க்கிறார்கள். உண்மையில் வாழைச்சேனை வைத்தியசாலை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருப்பதனால் குறித்த பதிவு விடயங்களை மேற்கொள்ளும் அதிகாரம் கோறளைபற்று மத்தி செயலகத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அதற்காக பல நியாயமான காரணங்கள் இருந்த நிலையில், அவைகளைப்புறக்கணித்து இவ்வாறான நடவடிக்கைகள் இனவாத நோக்குடன் கடந்த ஆட்சியிலிருந்த அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இந்த பிறப்பு, இறப்பு பதிவு விவகாரம் பலவந்தமாக பறித்தெடுக்கப்பட்டு கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்தோடு இணைக்கப்பட்டமை அப்பிரதேச மக்கள் மத்தியில் விஷனத்துக்குரிய விடயமாக நீண்டகாலமாக பேசப்பட்டு வந்தது. அதையும் கவனத்திலெடுத்து அவற்றுக்கான தீர்வுகளைப்பெற்றுத்தர வேண்டுமென அமைச்சரிடத்தில் கோரிக்கை விடுக்கின்றேன்.கள்ளிச்சை கிராமத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கான சகல வசதிகளும் வழங்கப்பட்டு மீள்குடியமர்த்த அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

யுத்த காலத்தில் கள்ளிச்சையிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் பிரதேச செயலகத்தினூடாக விடுக்கப்பட்ட போதும், அது மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றடையவில்லை.கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கள்ளிச்சையையும் உள்ளட்டக்கி மீள்குடியேற்றம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.கள்ளிச்சை மீள்குடியேற்றம் தொடர்பில் 2011ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நளீம் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகரைப்பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் காரமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்கள் காணி அனுமதிப்பத்திரங்களை குறித்த பிரதேச செயலகத்திலிருந்து பெற முடியாமல் ஓரங்கட்டப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

காரமுனை, நாவலடியில் வாழும் முஸ்லிம்களுக்கு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினால் அநீதியிழைக்கப்படுகின்றது. எனவே, காணிக்கச்சேரி நடாத்தப்படுகின்ற வேளையில் காரமுனை, நாவலடி பிரதேச மக்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளவதாக கல்குடா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ரவூப் ஹக்கீம் தீர்வினைக் கோரினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!