வட்டு வடக்கு, சித்தங்கேணி ஜே/158 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் இளைஞர் மீது 09.03.2025 அன்று தாக்குதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,கடந்த மார்ச் மாதம் 03ஆம் திகதி பிறந்தநாள் தினத்துக்கு எமது ஊரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கேக் வெட்டினோம். இது குறித்து வாட்ஸப்பில் விவாதிக்கப்பட்டது. பின்னர் அந்த குழுவில் இருந்த ஒருவர் அநாகரிகமான, வன்முறையை தூண்டும் சொற்பிரயோகத்தை வாட்ஸப் குழுமத்தில் பகிர்ந்திருந்தார்.
தாக்குதல் சம்பவம் நடந்த அன்று நாங்கள் மைதானத்தில் இருந்தவேளை அங்கு வந்து மிரட்டினார். பின்னர் தனது வீட்டு பக்கம் வரச்சொன்னார். அங்கு சென்றவேளை அவரது குடும்பத்தாருடன் இணைந்து கம்பி உள்ளிட்ட பொருட்களால் என்மீது தாக்குதல் மேற்கொண்டனர். அத்துடன் என்னை கடித்தனர் – என்றார்.இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.