இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் எஸ்.அச்சுதன் அதனை பார்வையிட்டார்.வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு இன்று (15) வருகை தந்த தேர்தல் ஆணைக்குழுவின் மேலதிக ஆணையாளர் தலைமையிலான குழுவினர் குறித்த மாணவனின் கண்டுபிடிப்பை பார்வையிட்டனர்.வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவன் கபிலாஸ் அவர்களால் அண்மையில் புத்தாக்க போட்டிக்காக கண்டுபிடிக்கப்பட்டு, தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற இலத்திரனியல் முறையிலான வாக்களிப்பு இயந்திரத்தை பயன்படுத்தி பாடசாலையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் வாக்களிப்பு செயற்பாடு இடம்பெற்றிருந்தது.
மாணவனினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் இலங்கையின் முதல் முறையாக இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.இலங்கை தேர்தல் முறையில் கடதாசி பாவனை இல்லாது இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்கின்ற நோக்கோடு குறித்த மாணவரினால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பொறிமுறை முதன் முறையாக மாணவர் பாராளுமன்றத்திற்கு பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.இந்நிலையில், குறித்த இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரம் தொடர்பாக அறிந்து கொண்ட தேர்தல் ஆணைக்குழுவினர் அதனை பாடசாலைக்கு சென்று பார்வையிட்டதுடன், அதன் செயன்முறை தொடர்பாகவும் அறிந்து கொண்டு மாணவனுக்கு தமது பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
அத்துடன், அதனை மேலும் விருத்தி செய்வது தொடர்பாகவும் ஆலோசனைகளை வழங்கியதுடன், எதிர்காலத்தில் இதனை மேலும் விருத்தி செய்து ஒத்திகை செயற்பாடுகளில் பயன்படுத்துவது குறித்தும் தமது ஆணைக்குழுவுடன் பேசி ஆலோசிப்பதாகவும் தெரிவித்திருந்தனர்.இதன்போது, வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ், பாடசாலை பிரதி அதிபர்களான திருமதி சுரேந்திரன், எஸ்.தர்சன், பாடசாலை ஆசிரியர்கள், உயர்தர மாணவர்கள், மாணவனின் பெற்றோர், பழைய மாணவர் சங்கத்தினரும் வருகை தந்திருந்தனர்.