கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் அருகே மந்தாரத்தொடி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 57). இவரது உறவினர்கள் சதானந்தன், விசாலாட்சி, ருக்மணி, கிருஷ்ண பிரசாத். இவர்கள் 5 பேரும் பாலக்காட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை சதானந்தன் ஓட்டி சென்றார்.அவர் செல்போனில் கூகுள் மேப் பார்த்தவாறு பாலக்காடு நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். திருச்சூர் அருகே கொண்டாழி-திருவில்யா மலை ஆகிய 2 பகுதிகளை இணைக்கும் காயத்ரி ஆற்றின் குறுக்கே எழுண்ணுள்ளத்து கடவு பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் வழி தவறி சாலையோர தடுப்புச்சுவரை உடைத்து கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.பின்னர் கார், நீரில் மூழ்க தொடங்கியது. ஆற்றில் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக ஆற்றில் குதித்து காரில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஒவ்வொரு நபராக 5 பேரும் மீட்கப்பட்டனர்.இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் இருந்த ஆற்றில் கார் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் கிரேன் மூலம், ஆற்றில் இருந்து கார் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.