யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுணாவுக்கு எதிராகச் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு வெகுசன ஊடக அமைச்சர் பதிலளித்தார்.சட்டத்தரணி சுவஸ்திகா அருலிங்கத்தை கடுமையாக விமர்சித்தமைக்காக அந்த உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்டார்.மேலும் குறித்த சட்டத்தரணி பிரதமருக்கு இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்நிலையிலேயே ராமநாதன் அர்ச்சுணாவுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கவும், நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்து குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இனவாத கருத்துக்களை வெளியிடுவதைத் தடுக்கவும் சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.