உத்தரபிரதேச மாநிலம், அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு வரன் தேடி வந்தார்.
இதனை தொடர்ந்து அவரது மகளுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைத்தது. இரு வீட்டாரும் திருமணத்திற்கு பேசி முடிவு செய்தனர்.வருகிற 16-ந்தேதி அவரது மகளுக்கு,வாலிபருடன் திருமணம் செய்ய நிச்சம் செய்தார். திருமண அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்து வந்தனர். மணப்பெண்ணின் வருங்கால கணவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று வந்தார்.அப்போது மணமகளின் தாய்க்கும் மாப்பிள்ளைக்கும் இடையே நெருக்கமான உறவு ஏற்பட்டது. மணமகளை விட அவரது தாய் அழகாக இருந்தார்.இதனால் மயங்கிய மாப்பிள்ளை தனது வருங்கால மாமியாருக்கு புதிய செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். மருமகன் – மாமியார் இருவரும் செல்போனில் நீண்ட நேரம் பேசி அரட்டை அடித்தனர். அவர்களது நட்பு காதலாக மாறியது.மணப்பெண்ணின் தாய் வருங்கால மருமகனுடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததால் வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக பேசி வருவதாக அந்தப் பெண் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார்.இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். மாமியார் தனது மகளுக்கு துரோகம் செய்துவிட்டு வருங்கால மருமகனுடன் வீட்டை விட்டு ஓடி போக முடிவு செய்தார்.திருமணத்திற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் நேற்று முன்தினம் மருமகனுடன் ஓட்டம் பிடித்தார்.தனது மகளுக்காக வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தையும் எடுத்து சென்று விட்டார்.வீட்டில் இருந்து வெளியேறிய மணப்பெண்ணின் தாய் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த மணப்பெண்ணின் உறவினர்கள் பீரோவை திறந்து பார்த்தனர். அதிலிருந்த நகை, பணம் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்தனர்.மணமகனின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவரும் வீட்டில் இல்லை. இருவரது செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தன.இதுகுறித்து உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போனவர்களின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.