குஜராத் மாநிலம் அம்பாஜியில் இளம் வயதில் கணவனை இழந்து 6 மாத குழந்தையுடன் தவித்த மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்துள்ளார் அவரின் மாமனார் பிரவீன் சிங் ராணா. கடந்த தீபாவளி அன்று மாரடைப்பால் ராணாவின் மூத்த மகன் சித்திராஜ் உயிரிழந்துள்ளார். அன்று முதல் தனது அம்மா வீட்டுக்கு செல்லாமல் மாமனார் வீட்டிலேயே மருமகள் இருந்து குழந்தையை கவனித்து வந்துள்ளார்.இதனையடுத்து தனது மருமகளுக்கு மறுவாழ்க்கை அமைத்து கொடுக்கும் நோக்கில் மாமனார் மணமகனை தேடி வந்தார். அதன்படி, அம்பாஜி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் தனது மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்தார் பிரவீன் சிங் ராணா. உற்றார் உறவினர்கள் முன்னிலையில் ஒரு தந்தை மகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல கோலாகலமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
மேலும் மருமகளை கட்டியணைத்து ஆனந்த கண்ணீருடன் மாமனார் வழி அனுப்பி வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருமகளுக்கு மாமனார் மறுமணம் செய்து வைத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.