ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள் என ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.வவுனியாவில் நேற்று (22) இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில்் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜேவிபி இங்கு களமிறங்கியுள்ளது. அதன் வேட்பாளர்கள் தமிழர்களாகவுள்ளனர். அவர்களுடைய சிந்தனை என்னவென்றால் தாங்கள் சபைகளை கைப்பற்ற வேண்டும். வடக்கில் கூடுதலான ஆசனங்களைப் பெற வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.பாராளுமன்ற தேர்தலில் வடக்கில் எவவாறு அதிக ஆசனங்களைப் பெற்றோமோ அதேபோல் சபைகளையும் கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் அடுத்து வரவிருக்கும் மாகாணசபை தேர்தலிலும் வெற்றி பெறலாம் என நினைக்கிறார்கள்.வவுனியாவில் ஜேவிபி சார்பாக இரண்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டார்கள். அதில் ஒருவர் வைத்தியர். மற்றவர் ஆசிரியர். ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர்கள் இருக்கின்ற போது உபாலி என்பவரை தேசியப் பட்டியலில் நியமனம் செய்து பிரதி அமைச்சராக்கி அபிவிருத்திக் குழுவின் தலைவராக போட்டுள்ளார்கள்.இந்த ஜேவிபியின் சிந்தனை எப்படி இருக்கின்றது என்று பாருங்கள். தமிழர்கள் படித்தவர்களாக வென்றுள்ளார்கள். வன்னி மண்ணிலே வெற்றி பெற்ற அந்த தமிழர்களுக்கு பதவிகள் வழங்காது ஒரு சிங்கள பெரும்பான்மை இனத்தை சேர்ந்த உபாலிக்கு கொடுத்திருக்கின்றது என்றால் இந்த அரசாங்கத்தின் சிந்தனையும் எப்படி இருக்கின்றது என்று பாருங்கள்.பிரதேச சபை, மாநகர சபை என்பவற்றை பிடித்து அடுத்த மாகாண சபையை பிடிக்கும் நிலை வரும். பிமல் ரத்நாயக்க ஜனாதிபதியின் பேச்சை விமர்சிக்க தமிழ் அரசியல் தலைவர்களுக்கு அருகதை இல்லை எனக் கூறுகின்றார். ஆகவே, ஒட்டுமொத்தமாக எல்லா சபைகளையும் பிடித்து விட்டால் தமிழர்களுக்கு இந்த நாட்டிலே அருகதை இல்லை என சொல்லி விடுவார்கள். அதனை இப்பவே ஆரம்பித்து விட்டார்கள்.தையிட்டி புத்தர் கோவில் பிரச்சனை தீர்கப்பட வேண்டும் எனில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாதாம். அதன் அர்த்தம் என்ன. வன்னி மண்ணில் விலை கொடுக்கப்பட்டுள்ளது. உயிர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த மண்ணில் இருக்கும் தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி உரையை விமர்சிக்க கூடாது எனக் கூறுவதற்கு பிமல் ரத்நாயக்கவுக்கு என்ன யோகியதை இருக்கிறது.
வடக்கில் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்று விட்டால் நீங்கள் எதுவும் பேச முடியுமா! ஜனாதிபதி தனது உரைகளில் சபைகைளை கைப்பற்றக் கூடிய கதைகளை சொல்லுகின்ற போது அதை விமர்சிக்கின்ற தமிழ் தலைவர்களை வாய் மூட வேண்டும் என கூற உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.தேர்தல் விஞ்ஞாபனத்தில் அனைவரும் இலங்கையர் என்று சொன்னார்கள். அந்த சிந்தனை இப்போது எங்கே? தமிழர்கள் எதற்கு போராடினார்கள். எங்களது உரிமை, மண், தேசம் பாதுக்கப்படும் எனப் போராடினார்கள். அப்படிப்பட்ட தமிழ் தரப்பை பார்த்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்.எமது வன்னி பிரதேசம் எத்தனையோ சிங்கள ஆட்சியாளர்களை ஆட வைத்தது. மறந்து விட வேண்டாம். அந்த வழி வந்த தமிழர்கள் உங்களுக்கும் சவாலாக மாறுவார்கள். ஆகவே பிரதேச சபை, நகரசபை, மாநகரசபை என்பவற்றை நாம் கைப்பற்றி ஆக வேண்டும். எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெற முடியாது. ஆனால் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும்.ஆட்சி அமைக்கும் போது ஜேவிபி உடனோ அல்லது எந்தவொரு சிங்களக் கட்சியிடனோ எங்களது உறவு இருக்க மாட்டாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடு இணைந்து செயற்படக் கூடிய வல்லமையை நாங்கள் உண்டு பண்ணுவோம். ஏனென்றால் நாம் ஒற்றுமையை நேசிப்பவர்கள்.சங்கு சின்னம் ஜனாதிபதி தேர்தலில் பொது சின்னமாக மாற்றம் பெறுகின்ற போது யாருமே சங்கு சின்னத் ஆதரிக்கவில்லை. இதில் இருக்கின்ற கட்சிகள் மட்டும் தான் அதனை ஆதரித்தன.தமிழரசுக் கட்சி பெரும்பான்மை தலைவர்களை ஆதரித்தார்கள். மக்களை வாக்களிக்க வேண்டாம் அமைதி காணுங்கள் என்றும் கூறியவர்கள் இருக்கிறார்கள். சங்கு சின்னத்தில் பொது வேட்பாளரை உருவாக்கி நாம் தான் செயற்பட்டோம் எனக் கூறுகின்றோம்.ஆகவே ஒற்றுமையை கருதி எங்களுடைய ஆட்சி அமைக்கின்ற விதம் தமிழ் தரப்புடன் தான் இருக்கும். அற்ப சொற்றபத்திற்காக கண்டவர்களின் காலில் விழும் நிலை இல்லை என்பதை கூறுகின்றேன்.
அடுத்த மாகாண சபை தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் சேர்ந்து போட்டியிடும். அதற்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். எமது மக்கள் அதை தான் விரும்புகிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு தர மறுக்கும் தமிழ் கட்சிகள் மக்களால் புறக்கணிக்கப்படும். மாற்றம் வேண்டும் ஊழலை ஒழிக்க வேண்டும் என நினைக்கும் சிங்கள தலைவர்களுக்கு ஒற்றுமை இல்லாத தமிழ கட்சிகளை மாற்றியமைக்க வேண்டும் என்பற்காக எங்களது மக்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் எமது மக்கள் எங்களோடு நிற்பார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப ஒரே அணியாக நிற்போம்.ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் என்ன செய்தோம் என எங்களை பார்த்து கூக்கிரல் இடுகிறார்கள். நான் கேட்கின்றேன். ஒரு பிரதி அமைச்சரை எங்களிடம் தாருங்கள். இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். உபாலி எதற்கு? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவியை பெற வேண்டும் என விரும்புகின்றோம். நாங்கள் முதுகெலும்பு உள்ளதால் அரசாங்கத்துடன் இணையவில்லை. முதுகெலும்பு இருந்தால் நீங்கள் அமைச்சு பதவி கேளுங்கள்.
ஆனால், அரசாங்கத்துடன வால் பிடிக்கின்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. அவ்வாறு பதவி பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வளமான கிராமங்களை உருவாக்கியுள்ளார்கள். ஆனால் அரசாங்கத்திற்கு வால்பிடிக்காது இருப்பதால் எமது மக்களின் தமிழ் கிராமங்கள் பலவற்றின் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை.ஆகவே, அபிவிருத்தி தேவை. கொண்டு செல்வதற்கான அடித்தளம் இந்த சபைகள் ஊடாக வரும். அதற்காக அந்த சபைகளை தமிழர் தரப்பு கைப்பற்ற வேண்டும். தமிழ் கட்சிகளை விமர்சிக்காதீர்கள். சபைகளை கைப்பற்ற முயற்சி செய்யுங்கள் எனத் தெரிவித்தார்.