வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது இறந்ததாகக் கூறப்படும் மீகஹகிவுலவைச் சேர்ந்த 25 வயதான நிமேஷ் சத்சரவின் உடல், அடக்கம் செய்யப்பட்டு 21 நாட்களுக்குப் பிறகு இன்று (23) காலை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.பதுளை நீதவான் நுஜித் டி சில்வா முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் தடயவியல் வைத்திய அதிகாரிகள், கராப்பிட்டிய மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகங்களின் தடயவியல் வைத்திய அதிகாரிகள் குழு, பதுளை பொலிஸ் குற்றவியல் பிரிவு மற்றும் கந்தகெட்டிய பொலிஸ் அதிகாரிகளும் இதன்போது பங்கேற்றனர்.இறந்த நிமேஷின் தாயார் அளித்த முறைப்பாட்டின் பேரில், கடந்த 9 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின் பேரில், சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், தமது மகன், பொலிஸ் காவலில் இருந்த போது சித்திரவதைக்கு உள்ளாகி இறந்துவிட்டதாகக் தாயார் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மூன்று பேர் கொண்ட வைத்திய நிபுணர் குழுவைக் கொண்ட விசேட குழுவால் மீண்டும் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா, பிறப்பித்த உத்தரவுக்கு அமைய கடந்த 09 ஆம் திகதி மாலை உயிரிழந்த நிமேஷின் கல்லறைக்கு கந்தகெட்டிய பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.அதன்படி, இன்று தோண்டிய எடுக்கப்பட்ட நிமேஷின் உடல், கொழும்பு பிரதான சட்டவைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.சடலம் மீட்கப்படுவதைக் காண உள்ளூர்வாசிகள் ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியிருந்தனர்.