பாதுகாப்பு காரணங்களுக்காகப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் மீள ஒப்படைப்பது குறித்துக் கலந்துரையாடியுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனைக் குறிப்பிட்ட அவர், விடுவிக்கக்கூடிய அனைத்து காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அனைத்து மக்களும் சமனான உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த அரசாங்கம் அமைந்துள்ளது. நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஊழலற்ற ஒரு அரசாங்கத்தை அமைத்திருக்கின்றோம்.கடந்த காலங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காகப் பொதுமக்களின் காணிகள் இராணுவ முகாம்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போது அந்த காணிகள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கின்றோம். விடுவிக்கக்கூடிய அனைத்து இடங்களையும் மீண்டும் மக்களுக்காக வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்.
அதேநேரம், பாரம்பரிய பயிர் செய்கை நிலங்கள் கூகுள் வரைபடத்திற்கு அமைய வனவளத் திணைக்களத்தினால் எல்லையிடப்பட்டிருக்கின்றன.குறித்த பகுதியில் விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்பட்டிருந்த மக்களுடைய நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.அத்துடன், கொழும்பில் மூடப்பட்டிருந்த பல வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கில் மூடியுள்ள சகல வீதிகளையும், மக்கள் பாவனைக்காகத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த காலங்கள் போல் அல்லாமல் இந்த அரசாங்கம் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தைக் கொண்டு மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கவுள்ளது. நாட்டை சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும். வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.ஏற்கனவே வழங்கப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கான நிதிகளை விடுவிப்பதற்கு உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.