கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா பூஜாரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 21). இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவரது மனைவிக்கு கடந்த 8 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது.கார்த்திக்கிற்கு அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடரெட்டி, சுப்பிரமணி உள்பட 5 நண்பர்கள் இருந்தனர். நேற்று முன்தினம் கார்த்திக் தனது நண்பர்கள் வெங்கடரெட்டி, சுப்பிரமணி உள்பட 5 பேருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது அவரது நண்பர் களிடம், கார்த்திக் ஒரு சவால் விட்டார்.அதாவது மதுவில் தண்ணீர் கலக்காமல் ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 மதுபாட்டில்களை, அதாவது 5 லிட்டர் மதுபானத்தை குடிப்பேன் என்று கூறி பந்தயம் கட்டினார். அவரது சவாலை ஏற்ற அவருடைய நண்பர்கள் அவ்வாறு 5 லிட்டர் மதுபானத்தை குடித்தால் ரூ.10 ஆயிரம் தருவதாக தெரிவித்தனர்.இதையடுத்து கார்த்திக் மதுவில் தண்ணீர் கலக்காமல் அப்படியே குடித்தார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி அவரது நண்பர்களிடம் கூறினார்.இதனால் அவரை உடனே அரசு மருத்துவமனைக்கு அவரது நண்பர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் மதுபோதையில் இருந்ததால் கார்த்திக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. இதனால் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனைக்கேட்டு கார்த்திக்கின் மனைவியும், குடும்பத்தாரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த சம்பவத்தால் கார்த்திக்கின் மனைவி, சிறு வயதிலேயே தன் கணவனை இழந்த ஒரு பெண்ணாக வாழ்க்கை நடத்து சூழல் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.