போரிஸ் ஜான்ஸன் கெர்ரி திருமணம் கடந்த 2021ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவது குழந்தை பிறந்துள்ளது. இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் மனைவி கேர்ரி ஜான்சன் கருவுற்றிருந்த நிலையில் மே 21-ம் தேதி அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். குழந்தைக்கு பாப்பி எலிஸா ஜோஸபைன் ஜான்சன் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாப்பி, போரிஸ் -கெர்ரியின் நான்காவது குழந்தையாகும்.இது குறித்து போரிஸ் ஜான்ஸன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த உலகுக்கு பாப்பி எலிஸா ஜோஸபின் ஜான்சனை வரவேற்கிறேன், நீ இவ்வளவு அழகாக, குட்டியாக இருப்பதைப் பார்த்து என்னால் நம்பவே முடியவில்லை. இந்த உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன் என்று பதிவிட்டு குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார்.மொத்தமாக போரிஸ் ஜான்சன் மூன்று திருமணங்களின் மூலம் 9 குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளார். ஏற்கனவே, அவர் கடந்த 2021-ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் 6 குழந்தைகள் இருப்பதாக உறுதிப்படுத்தினார். இப்போது குழந்தையின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்திருக்கிறது.எப்படி என்றால், அவரது முதல் திருமணம் அலெக்ரா மோஸ்டின்-ஓவனுடன் (1987-1993) நடைபெற்றது, ஆனால் இந்தத் திருமணத்தில் அவருக்கு குழந்தைகள் இல்லை. அதன்பிறகு,1993-ஆம் ஆண்டு மெரினா வீலருடா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அப்போது லாரா, மிலோ, காசியா, மற்றும் தியோடர் என்ற 4 குழந்தைகள் இவர்களுக்கு பிறந்தனர்.பிறகு, 2020-ஆம் ஆண்டு மெரினா வீலருடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார்கள். அடுத்ததாக, ஹெலன் மெக்இன்டயருடனான உறவில் ஸ்டெபனி என்ற குழந்தை 2009இல் பிறந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், கேரி ஜான்சன் என்பவரை 2021-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு வில்ப்ரெட், ரோமி, ப்ராங்க், மற்றும் இப்போது பிறந்த குழந்தையுடன் (பாப்பி எலிசா )வுடன் சேர்த்து நான்கு குழந்தைகள் உள்ளனர். மொத்தமாக 9-வது முறையாக 60 வயதில் தந்தையாகியுள்ள போரிஸ் ஜான்சனுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.