ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளான ரபீக் பக்ரி, பன்வர் லால், அங்கித் பன்சால், கரண் குப்தா ஆகியோருக்கு, அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.அதன்படி அவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் 4 பேரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை. 4 கைதிகளும், போலீசாரும் ஜெய்ப்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு சென்றனர். சகல சொகுசு வசதிகளும் உள்ள அந்த ஓட்டல்களில் காலை உணவு சாப்பிட்டுள்ளனர்.பின்னர் உல்லாசப் பயணம் செல்வதுபோல், தனித்தனி அறை எடுத்து தங்கி ‘உற்சாகமாக’ பொழுதை கழித்துள்ளனர். இதையெல்லாம்விட 4 கைதிகளும் அவர்களது மனைவி மற்றும் காதலிகளை தனிமையில் சந்தித்து, மகிழ்ச்சியுடனும் இருந்துள்ளனர். ரபீக் தனது மனைவியையும், பன்வர் தனது முன்னாள் காதலியையும் ஓட்டலில் சந்தித்தனர். இதில் ரபீக்கின் மனைவி போதைப்பொருளுடன் வந்திருந்ததாக கூறப்படுகிறது.அங்கித் மற்றும் கரண் ஆகியோர் விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றனர். அந்த ஓட்டல் கரணின் காதலியால் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. அந்த ஓட்டலில் கரணின் உறவினர்கள் சிலரும் வந்திருந்தனர்.இந்த உற்சாகத்தில் கைதிகள் 4 பேரும், மாலை 5.30 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்பதையே மறந்துவிட்டனர். யாரும் சிறைக்கு மீண்டும் செல்லவில்லை.இதுபற்றி சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர் இதுபற்றி உடனடியாக விசாரணை நடத்தினர். அப்போது இதற்கு போலீசாரே உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரையிலும், சிலருக்கு ரூ.5 ஆயிரம் வரையிலும் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து ரபீக், பன்வர், அங்கித், கரண் மற்றும் அவர்களை அழைத்தச் சென்ற 5 போலீசார், உறவினர்கள் உள்பட 13 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.பணம் கொடுத்துவிட்டால் போதும் சிறைக்குள் சுதந்திரம் கிடைத்துவிடும் என்றாகிவிட்ட நிலையில், மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் சிறைக்கைதிகளை உல்லாசப் பயணத்துக்கு போலீசார் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.