குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் கெரிடா கிராமத்தில் விஜாப்பூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண்ணை அவருடைய புகுந்த வீட்டை சேர்ந்த உறவினர்கள் சிலர் கொடுமை செய்துள்ளனர்.இதில், அந்த பெண்ணின் கணவரின் சகோதரி ஜமுனா தாகுருக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளன. அந்த பெண், கணவருக்கு உண்மையான மனைவியாக இருக்கிறாரா? இல்லையா? என உறுதி செய்து கொள்ள விரும்பியுள்ளார்.இதனால், ஜமுனா அவருடைய கணவர் மனுபாய் தாகுர் மற்றும் 2 பேர் சேர்ந்து அந்த பெண்ணை அறைக்குள் அழைத்து சென்றனர். அவரிடம் உன்னுடைய கணவருக்கு நீ உண்மையான மனைவி என்றால் கொதிக்கும் எண்ணெய் உள்ள பானைக்குள் கையை விடு.அப்படி உண்மையான மனைவியாக இருந்து விட்டால் உனக்கு எதுவும் ஆகாது என கூறி அவரை வற்புறுத்தியுள்ளனர். இதனால், அந்த பெண்ணும் எண்ணெயில் விரல்களை விட்டு உடனடியாக வெளியே எடுத்து விட்டார். இதில், அவருடைய விரல்களில் காயங்கள் ஏற்பட்டன.இந்த சம்பவத்தில் அந்த பெண் விஜாப்பூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதில் தொடர்புடைய 4 பேரும் தப்பியோடி விட்டனர். இதுபற்றி போலீஸ் துணை சூப்பிரெண்டு தினேஷ் சின்ஹ சவுகான் கூறும்போது, ஜமுனா உள்பட 4 பேருக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய வீடியோ ஒன்று நேற்று முன்தினம் வைரலானது. குற்றவாளிகளை தேடும் பணி நடந்து வருகிறது என கூறியுள்ளார்.