கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலையில் இரண்டு மாணவர்கள் குழு மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 மாணவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதிவரை கல்முனை சிறுவர் பாதுகாப்பு நிலையத்தில் காவலில் வைக்க கந்தளாய் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், சந்தேக நபர்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.குறித்த சம்பவத்தில் காயமடைந்த மூன்று மாணவர்களில் இருவர் அளித்த வாக்குமூலங்களில் அடிப்படையில், அடையாளம் காணப்பட்ட 8 மாணவர்களும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரை மருத்துவ பரிசோதனைக்காக நீதித்துறை மருத்துவ அதிகாரியிடம் அனுப்புமாறு நீதிவான் காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.அத்தோடு, தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவர், முன்னதாக சிறுவர் நன்னடத்தை மையத்தில் இருந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் என காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்தில் கொண்ட நீதவான், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளை எதிர்வரும் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.