தெற்கு கடலில் மிதந்த நிலையில் நேற்று (14) கண்டறியப்பட்ட போதைப்பொருளாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் சுமார் 50 பொதிகள் தங்காலை மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நேற்று (14) மாலை இந்த பொதிகள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 3 பொதிகளில் ஹெரோயின் இருப்பதாகவும், மற்ற 48 பொதிகளிலும் ஐஸ் ரக போதைப்பொருள் இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுவதாக கடற்படை தெரிவிக்கின்றது.அவை உனாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்றும் சந்தேகிக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை மூன்று படகுகள் ஊடாக நாட்டிற்குள் போதைப்பொருள் கொண்டு வரப்படவுள்ளமை குறித்து பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் பணிப்பாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹேமல் பிரசாந்தவுக்கு கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தகவல் கிடைக்கப்பெற்றிருந்தது. அதன்படி, பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம், தெவுந்தர மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன. அவர்கள் சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.படகுகளின் இருப்பிடத்தை அடையாளம் காண, அதில் நிறுவப்பட்ட VMS அமைப்பையும் அவர்கள் செயலிழக்கச் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை விமானப்படையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில் அந்த 3 படகுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்படுகின்றது.எனவே இன்று கண்டுபிடிக்கப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சந்தேகநபர்களில் கடலில் வீசிச் சென்றிருக்க முடியும் என சந்தேகிக்கப்படுகின்றது.
தெற்கு கடலில் மிதந்த 50 போதைப்பொருள் பொதிகள் மீட்பு – தங்காலை அதிர்ச்சி
53