நீண்டதூர பேருந்துகள் மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் இயக்க ஆரம்பிப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு அடிப்படை தர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்விடயம் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் பிமல் ரத்நாயக்க 6 முக்கிய அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.மேலும் 100 கிலோமீற்றருக்கு மேல் பயணிக்கும் வாகனங்கள் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன் அடிப்படை தர பரிசோதனை சான்றிதழை பெறுவது கட்டாயம் என அவர் குறிப்பிட்டார்.அத்தோடு, சுற்றுலாப் பேருந்துகள், சிறப்பு பயணங்கள் மேற்கொள்ளும் பேருந்துகள் மற்றும் சுமார் 10 முதல் 20 பயணிகளை ஏற்றிச் செல்லும் சிற்றூர்திகளுக்கும் அந்த தர பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.இது பெரிய அளவிலான ஆய்வுகள் அல்ல என்றாலும் சக்கரங்கள், கண்ணாடிகள் மற்றும் பிரேக் போன்ற அத்தியாவசிய ஆய்வுகளை உள்ளடக்கியது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.