இன்று முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைத் தவிர்த்து ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளதாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்போது சுமந்திரன் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது.அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது. எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர்.முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது. தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள்.
ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர். பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன.
அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும்.வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,
முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும்.ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும்.இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள்.அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்தார்