Wednesday, May 21, 2025
Homeஇலங்கைவவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை வழக்கிலிருந்து புளோட் நெடுமாறன் விடுவிப்பு

வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை வழக்கிலிருந்து புளோட் நெடுமாறன் விடுவிப்பு

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதியரசர்களான சசி மகேந்திரன், அமல் ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்விலேயே இந்த தீர்ப்பு இன்று (20) அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளோட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல் நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இந்நிலையில், இத்தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது.மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று (20) தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
அந்தவகையில், குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி.தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் ஆஜராகினர். சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டை ஊடாக பணம் செலுத்தும் வசதி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!