கண்டியில், இரசாயனம் கலந்த 5,000 ரூபாயைப் பயன்படுத்தி பாரவூர்தி ஓட்டுநரை மயக்கமடையச் செய்து, 90,000 ரூபாயைக் கொள்ளையடித்தமை தொடர்பில், மூன்று பாகிஸ்தான் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றுலா விசாக்களில் நாட்டில் தங்கியுள்ள குறித்த பாகிஸ்தான் பிரஜைகள், திட்டமிட்ட வகையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.முன்னதாக, சந்தேக நபர்கள், பேராதெனியவில் வைத்து, 5,000 ரூபாய் தாளை மாற்ற உதவி கோரும் போக்கில் பாரவூர்தியை நிறுத்தி ஓட்டுநரை அணுகியுள்ளனர்.
இதன் போது, சந்தேக நபர்களில் ஒருவர் அந்தத் தாளை ஓட்டுநரின் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில், அதில் இரசாயனப் பொருள் இருந்ததால், பாரவூர்தியின் ஓட்டுநர் சுயநினைவை இழந்ததாகவும் கூறப்படுகிறது.பின்னர், ஓட்டுநருக்கு சுயநினைவு திரும்பியபோது, தான் வைத்திருந்த 90,000 ரூபாய் பணம் திருடப்பட்டதைக் கண்டறிந்தார்.
அவர் செய்த முறைப்பாட்டுக்கு இணங்க, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் சந்தேக நபர்கள் தப்பிச் சென்ற வாகனத்தை அடையாளம் காணப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்தனர்.இதன்படி, வாகனத்தின் உரிமத் தகடு எண்ணை வைத்து, வத்தளையில் உள்ள ஒரு வாடகை சேவை மையத்திற்கு வாகனம் சென்றதை அவர்கள் கண்டறிந்தனர்.பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டு, பேராதனை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு கண்டி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்தநிலையில், மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ளதால், சந்தேக நபர்களை ஒக்டோபர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.