ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக, ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு புத்தளம், பாலாவி, நாகவில்லு வைட் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் நடைபெற்றது.பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஓ.எச்.ஆர்.டி (OHRD) அமைப்பு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு, ஷேக் முஹம்மது பதா அலி அப்துல்லா அல் காஜா அனுசரணை வழங்கினார். இந்நிகழ்வின் முக்கிய விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமரி , பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக, பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம். இல்லியாஸ், வர்த்தகப் பிரமுகர்களான டி.எல்.எம். நவாஸ், ஜவ்பர் அப்துல் சத்தார், முஹம்மத் இக்பால் சத்தார், இப்திகார் சாதிக், அமீன் பைலா, பாராளுமன்ற உறுப்பினர் முத்து வாப்பா, புத்தளம் நகர சபை முதல்வர், மற்றும் வைத்தியர் மரீனா தாஹா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
திருமணத் தம்பதிகளுக்கான உதவிகள் திருமணச் செலவுகளுடன் சேர்த்து, ஒவ்வொரு தம்பதியினருக்கும் மூன்று இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கொழும்பு மேமன் சங்க வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலதிபர் டி.எல்.எம். நவாஸ், மற்றும் ரிஷாத் பதியுதீனின் பாரியார் உட்படப் பலரும் தம்பதிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் 20 உலமாக்கள், திருமணப் பதிவாளர், தம்பதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.எம். முபாரக் மதனியின் திருமணத் தம்பதிகளுக்கான மார்க்கச் சொற்பொழிவும் அல்ஹாபிழ் ரியாஸின் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இந்த நிகழ்வின் ஏற்பாட்டுச் செயலாளராக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.