கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி அருகே சோமனஹள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ராகவேந்திரா கேசவ் ஹெக்டே. இவருக்கு சொந்தமான பண்ணை தோட்டத்தில் ஹாவேரி மாவட்டம் ஒசகித்தூர் கிராமம் அருகே திப்டூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி தங்களது 2 மகன்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள். அவர்களது முதல் மகனுக்கு 9 வயதும், 2-வது மகனுக்கு 7 வயதும் ஆகிறது.ராகவேந்திராவின் தோட்டத்தில் குரங்குகள் அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது. இதனால் அவர் குரங்குகளை விரட்டுவதற்காக தோட்டத்தில் உள்ள ஒரு அறையில் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்துள்ளார்.நேற்று காலையில் தோட்டத்தில் வழக்கம்போல் அந்த தம்பதி வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களது 2 மகன்களும் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தோட்டத்திற்கு வேலை செய்ய வந்த இன்னொரு தொழிலாளி, துப்பாக்கிகள் வைக்கப்பட்டு இருக்கும் அறையை திறந்தார். பின்னர் அவர் ஒரு துப்பாக்கியில் குண்டுகள் வைத்து வேலை செய்து கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அங்கு வந்த 2 சிறுவர்களும் அந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது விளையாட்டாக 7 வயது சிறுவன், தனது 9 வயது சிறுவனான அண்ணனை துப்பாக்கியால் சுட்டான். அப்போது துப்பாக்கியில் இருந்து குண்டு வெளியேறி 9 வயது சிறுவனின் வயிற்றில் பாய்ந்தது.இதனால் வலியால் துடித்த அந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தான். இதைப்பார்த்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி ராகவேந்திராவுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அக்கம்பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்கள் இதுபற்றி சிர்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிர்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உரிய பாதுகாப்பின்றி துப்பாக்கிகள் வைத்திருந்ததாக சிர்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்ட உரிமையாளர் ராகவேந்திராவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.