தலைமன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் வடமத்திய மாகாண கடற் படையினரின் கூட்டு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட குறித்த 32 இந்திய மீனவர்களும் கடற்படையின் விசாரணைகளின் பின்னர் நேற்று (23) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் 32 மீனவர்களும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 32 மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
Discover more from Taminews|Lankanews|Breackingnews
Subscribe to get the latest posts sent to your email.