அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 7 போர்களை நிறுத்தியதாக கூறி வருகிறார்.
இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.ஆனாலும் தனக்கு நோபல் பரிசு வழங்க மாட்டார்கள் என்றும் ஆதங்கத்தை சில நாட்களுக்கு முன்பு வெளிப்படுத்தி இருந்தார். இதற்கிடையே டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சில நாட்டு தலைவர்கள் ஆதரவு அளித்தனர்.இந்த நிலையில் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று டிரம்ப் மீண்டும் கூறி உள்ளார். விருது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற டிரம்ப் பேசியதாவது:-
உலக அரங்கில் இதற்கு முன்பு செய்யப்படாத மதிக்கப்படும் பல விஷயங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் சமாதான ஒப்பந்தங்களை உருவாக்கி வருகிறோம். போர்களை நிறுத்துகிறோம்.இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும், தாய்லாந்துக்கும் கம்போடியாவிற்கும் இடையிலான போர்களை நிறுத்தினோம். மொத்தம் 7 போர்களை தடுத்து நிறுத்தினேன். இந்தியா-பாகிஸ்தான் போரில் வர்த்தகத்தை காரணம் காட்டி சண்டையை நிறுத்தினேன்.ரஷியா-உக்ரைன் இடையிலான மோதலை நிறுத்த முடிந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று என்னிடம் சொல்லப்பட்டது. ஆனால் நான் 7 போர்களை நிறுத்தி இருக்கிறேன். ஒவ்வொன்றிற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று நான் சொன்னேன். ஆனால் ரஷியா-உக்ரைன் போரை நீங்கள் நிறுத்தினால் நோபல் பரிசு பெற முடியும் என்று சொன்னார்கள்.
ரஷியா-உக்ரைன் மோதலைத் தீர்ப்பது எளிது என்று நினைத்தேன்.ஏனென்றால் எனக்கு ரஷிய அதிபர் புதினுடன் நல்ல உறவு இருக்கிறது. அவர் மீது சில அதிருப்தி இருந்தாலும் போரை நிறுத்த முயற்சித்தேன். அது எளிதாக இல்லையென்றாலும் அதைச் செய்து முடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.