அமெரிக்கா வெளியிட்டுள்ள சட்ட விரோதமாகப் போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் 23 நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்ட விரோதமாகப் போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டார்.23 நாடுகளைக் கொண்ட அந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்தப் பட்டியலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியன்மார் உள்ளிட்ட 5 நாடுகளைக் குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவைச் சேர்த்த ட்ரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.