யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர் ஒருவர் தனது கடமை நேரத்தில், தனது வெளிநாட்டில் இருந்து வந்த உறவுகளை சந்திக்க சென்றவேளை கையும் களவுமாக தவிசாளரிடம் சிக்கிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பருத்தித்துறை பிரதேச சபையில் ஊழியராக கடமையாற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை சேர்ந்த ஊழியர் ஒருவர், அலுவலகத்திற்கு வருகை தந்து கையொப்பம் இட்டுவிட்டு தனது கடமை நேரத்தில் அலுவலகத்தை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியில் சென்றுள்ளார்.திடீரென பருத்தித்துறை பிரதேச சபைக்குள் திடீரென முன்னறிவிப்பு இன்றி உள்நுழைந்த தவிசாளர் யுகதீஸ் ஊழியரை தேடிய போது அங்கு கடமையில் இருந்த ஊழியரை காணவில்லையென கூறப்படுகின்றது.
கதவுகள் திறக்கப்பட்டு, முக்கிய ஆவணங்கள் பாதுகாப்பு இன்றி இருந்தமையை அவதானித்த தவிசாளர் , ஊழியரை தொலைபேசி மூலம் அழைப்பு எடுத்து உடன் வரவழைத்துள்ளார்.சம்பவம் தொடர்பாக தவிசாளர் ஊழியரிடம் வினவியபோது, வெளிநாட்டில் இருந்துவந்த தனது உறவினர்களை சந்திக்க சென்றதாக ஊழியர் தவிசாளருக்கு விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனையடுத்து அலுவலகத்துக்குள் நுழைந்து கையொப்பமிட்டு கடமை நேரத்தில் அனுமதியின்றி வெளியில் சென்று தனது கடமையை துஷ்பிரயோகம் செய்த ஊழியருக்கு எதிராக தவிசாளரால் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.