ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை நேற்று சிகிச்சைக்காக அழைத்து வந்தார். டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆகியிருந்ததையும், ரத்தப்போக்கு அதிக அளவில் ஏற்பட்டு இருந்ததும் தெரிந்தது.உடனே சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு அந்த வாலிபரும், இளம்பெண்ணும் கணவன்-மனைவி தானா? என்று சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இதுகுறித்து கோபி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பொன்மணிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பொன்மணி மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தனியார் மருத்துவமனைக்கு சென்று வாலிபரிடமும், சிகிச்சை பெற்றும் வரும் இளம்பெண்ணிடமும் விசாரணை நடத்தினார். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளிவந்தன.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 20 வயதுடைய வாலிபர் ஒருவர் தன்னுடைய தாயார் மற்றும் 19 வயதுடைய இளம்பெண்ணுடன் கடந்த ஆண்டு கோபி கச்சேரிமேடு சீத்தாம்மாள் காலனியில் உள்ள வீட்டுக்கு குடிவந்துள்ளார். இளம்பெண் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தங்கி படித்து வந்துள்ளார். அப்போது வாலிபருக்கும், அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் ஆகாமலேயே கணவன்-மனைவிபோல் சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.இதற்கிடையே மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காக வாலிபர் திருப்பூரில் இருந்து கோபிக்கு குடிவந்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வாலிபர் யூடியூப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். இதில் பெண் குழந்தை பிறந்தது.
ஆனால் அதன்பின்னர் மாணவிக்கு ரத்தப்போக்கு நிற்கவில்லை. ஒருநாள் முழுவதும் வீட்டிலேயே வைத்து பார்த்த வாலிபருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் மாணவியை சிகிச்சைக்காக கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்படவே விஷயம் வெளியில் வந்துவிட்டது.
இதையடுத்து மருத்துவத்துறை அதிகாரிகள் வாலிபர் தங்கியிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கு வாலிபரின் தாய் குழந்தையை கண்காணித்து வந்தது தெரிந்தது. மேலும் வாலிபர் யூடியூப் பார்த்து பிரவசம் பார்த்த அறையில் இருந்து தொப்புள் கொடியை கைப்பற்றினர். தொடர்ந்து வாலிபரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.