எல்ல – வெல்லவாய பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களை மீட்கச் சென்ற இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார்.இலங்கை இராணுவத்தின் 2ஆவது சிறப்புப் படையை சேர்ந்த பண்டார என்பவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எல்ல பகுதியைச் சேர்ந்த அவர் விடுமுறை காரணமாக வீட்டிற்கு வந்திருந்தபோது, தன் வீட்டின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க முன்வந்துள்ளார்
1000 அடிக்கும் அதிகமான பாறையில் கவிழ்ந்திருந்த பேருந்தில் இருந்தவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் சேர்ந்து குறித்த இராணுவ அதிகாரியும் கீழே சென்றுள்ளார்.இதன்போது, அங்கிருந்த சரிந்து விழுந்த கல்லொன்று அவரது முகத்தில் விழுந்துள்ளது.அந்த வலியையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து மீட்பு பணியை தொடங்கியுள்ளார்.
பின்னர் அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு, பதுளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்நிலையில், காயமடைந்த அவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.இந்நிலையில் குறித்த இராணுவத்தினரை பலரும் பாராட்டி வரும் அதேவேளை விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு, எல்ல – வெல்லவாயைச் சாலையில் மகவாங்குவ “மவுண்ட் ஹேவன் ஹால்” அருகே, வெல்லவாயை நோக்கிச் சென்றிருந்த சுற்றுலா பேருந்தொன்றை, எதிரே வந்த ஜீப் வாகனம் மோதியதில், பேருந்து சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் மோதி, சுமார் 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கினுள் கவிழ்ந்துள்ளது.விபத்தில் 09 பெண்களும், 06 ஆண்களும் என மொத்தமாக 15 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.