அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்து அதிரடி காட்டினார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தவர்கள் நாடு கடத்தப்பட்டனர்.தற்போது டிரம்ப்பின் பார்வை திரைப்படத்துறை மீது திரும்பி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு 100 சதவீதம் வரி விதித்து உத்தரவிட்டு உள்ளார். இது தொடர்பாக டிரம்ப் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-
அமெரிக்க திரைப்படத்துறை மிக வேகமாக அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. நமது திரைப்பட தயாரிப்பாளர்களையும், ஸ்டுடியோக்களையும் மற்ற நாடுகள் அமெரிக்காவில் இருந்து பிரிக்க அனைத்து வகையான சலுகைகளை வழங்கி வருகிறது. இதனால் ஹாலிவுட் உள்பட திரைப்பட துறை அமெரிக்காவிற்குள் பேரழிவுக்கு உள்ளாகி வருகிறது.இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி ஆகும். இது அமெரிக்க திரைப்பட துறைக்கும், தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.மற்ற நாடுகளிடம் இருந்து போட்டி தீவிரமடைந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதனை உடனடியாக செயல்படுத்த வணிகவரித்துறை மற்றும் வர்த்தக பிரதிநிதிகளுக்கு நான் அதிகாரம் அளித்து உள்ளேன்.அமெரிக்காவில் மீண்டும் திரைப்படம் தயாரிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.