உத்தரகாண்ட் மாநிலம், ஜாஸ்பூர் உதய்சிங் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் செளத்ரி. இவரின் மனைவி சலோனி. இவர்கள் இருவரும் 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில், சுபம் செளத்ரி வேறு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் தெரிய வந்ததும் கணவன் – மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சுபம் செளத்ரி, சலோனியை உடல்ரீதியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, சலோனி கணவரிடமிருந்து விவகாரத்து பெறும் முடிவில் இருந்துள்ளார்.இதுதொடர்பாக, தன் பெற்றோர் மற்றும் சகோதரரிடமும் தெரிவித்துள்ளார். இதனிடையே கடந்த மாதம் சுபம், சலோனியின் பெயரில் ரூ.25 மதிப்பிலான இன்சூரன்ஸ் தொடங்கியிருந்தார். இதற்காக ரூ.2 லட்சம் ப்ரீமியம் தொகை கட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த இன்சூரன்ஸ்க்கு தன்னுடைய பெயரை சுபம் நாமினியாக போட்டிருந்தார். இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சலோனி உயிரிழந்தார். அப்போது முதலே சலோனியின் உயிரிழப்புக்கு சுபம்தான் காரணம் என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து சலோனியின் சகோதரர் அஜித் சிங், காவல் நிலையத்தில் சுபம் சிங் மீது புகாரளித்தார்.
இதுதொடர்பாக போலீஸார், “சலோனி மரணம் தொடர்பாக முதலில் நாங்கள் சந்தேக மரணம் பிரிவில்தான் வழக்குப்பதிவு செய்தோம். போஸ்ட்மார்டம் முடிவில்தான் இது கொலை என்பது உறுதியானது. அதனால் இதைக் கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறோம். பிரேதப் பரிசோதனை முடிவில் சலோனியின் உடலில் பாம்பு விஷம் இருப்பது உறுதியாகியுள்ளது. இன்சூரன்ஸ் தொகைக்காக, சுபம் சலோனியின் உடலில் பாம்பு விஷத்தை ஊசி மூலம் செலுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். சலோனியின் உடல் உறுப்புகள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. விசாரணை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.” என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரகாண்ட் மாநிலத்தில், கடந்தாண்டு பெண் ஒருவர் தனது காதலனை இதே பாணியில் கொலை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தன் காதலனை கொல்வதற்காக, பாம்பு பிடிக்கும் ஒருவரை பணியமர்த்தி, அவர்மூலம் தன் காதலனை, பாம்பை வைத்து கடிக்கச் செய்து கொலை செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.